தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே வேப்பமரத்தூர் கிராம மக்கள் 6 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு தருமபுரி:பொம்மிடி அருகே வேப்பமரத்தூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், மாற்று சாதியில் திருமணம் செய்ததால், அவரை கிராம நிகழ்வுகளில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தன்னை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதாகவும், மாற்று சாதியில் திருமணம் செய்ததால்தான் இவ்வாறு செய்கின்றனர் எனவும் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் மீது சுரேஷ் பிசிஆர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் நீதிமன்றத்தில் கிராம மக்கள் தரப்பில், ''நாங்கள் கோயிலுக்கு வரும் யாரையும் தடுக்கவில்லை. மேலும், இது அனைவருக்குமான கோயில். தனிப்பட்ட நபர், அவருடைய சொந்த வெறுப்புகளின் காரணமாக தவறான வழக்கு தொடுத்துள்ளார்'' என விளக்கம் அளித்து உள்ளனர்.
இதன் அடிப்படையில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர். இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் வரி வாங்கவில்லை எனவும், தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டதாகவும் பொம்மிடி காவல் நிலையத்தில் சுரேஷ் மீண்டும் புகார் அளித்துள்ளார். இதனால் காவல் துறையினர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது என்றும், விழா ஏற்பாடுகளை நிறுத்தி வைக்குமாறும் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ராமு, கவிதா, அமுதா, அலமேலு, விஜயா மற்றும் தேன்மொழி ஆகிய 6 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் தற்போது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் நடைபெற்ற சம்பவம் குறித்து பொம்மிடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தற்கொலைக்கு முயன்று சிகிச்சைப் பெற்று வருபவா்களை முன்னாள் அமைச்சா் பழனியப்பன், பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளனா். மேலும் இது குறித்து தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணியிடம் கேட்டபோது, ''வேப்பமரத்தூர் கிராமத்தில், மாற்று சாதியில் திருமணம் செய்து கொண்ட ஒருவரை ஊரை விட்டு தள்ளி வைத்ததாகப் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று இரு தரப்பினரையும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று இரு தரப்பினரையும் விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், நேற்று இரவு கிராம மக்கள் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்கொலை எண்ணத்தை தவிர்த்திடுக ஆனால், காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்ததால், உடனடியாக தற்கொலைக்கு முயன்றவர்களை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து அனுமதித்தனர். தற்போது ஆறு பேரும் நல்ல நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து இன்று இந்த கிராமத்தைச் சார்ந்த சுரேஷ் மற்றும் கிராம மக்கள் என இரண்டு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற உள்ளது. அதில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"நீ வா பார்த்துக் கொள்ளலாம்" - கைகலப்பாக மாறிய முகநூல் வாக்குவாதம்... நடந்தது என்ன?