தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் அனைத்து கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாரம்பரிய கிராமிய கலை விழா நிகழ்ச்சியை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.
பின்னர் நலிவுற்ற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய அவர், "நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் மாநில அளவில் 37 மாவட்டங்களில் சுமார் 42 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். தருமபுரியில் இரண்டாயிரத்து 499 பேர் பதிவு செய்து மாநிலத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
தகுதி படைத்த கிராமிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் இந்த நலவாரியங்களில் பதிவுசெய்வதில்லை. அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு முயற்சிகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 906 நலிவுற்ற கலைஞர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம், 32 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.