தருமபுரி:பழைய தருமபுரி சின்னத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வேலு மகன் சத்ரியன் (25). இவர் 17 வயதுடைய பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டனர். இது குறித்து பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர் சத்ரியனை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜாமினில் வெளிவந்த சத்ரியன், தான் காதலித்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடைந்ததால், தருமபுரி பேருந்து நிலையத்தில் கல்லூரிக்குச் சென்ற போது அப்பெண்ணைச் சேர்ந்து வாழ அழைத்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பெண்ணின் தாயார் சத்ரியனை மிரட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.
பின்னர், காவல் துறையினர் இது குறித்து சத்திரியனிடம் விசாரனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தான் சத்ரியன் இரண்டு நாள்களாக காணாமல் போன நிலையில் இன்று (டிச.24) காலை தருமபுரி அடுத்த ஆலங்கரை செல்லும் வழியில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகில் மரத்தில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால், அங்கு கூடிய உறவினர்கள் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சத்திரியனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.