தர்மபுரி(Dharmapuri):காரிமங்கலம் அருகே போத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சிவகாமி(46) என்பவர் தர்மபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்.
’அந்த கண்ணம்மா தான் காரணம்... நான் தீ குளிக்கனும்’
அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து, தனது உடலின் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார், சிவகாமி. இதனையறிந்த காவல் துறையினர் அவரைப் பாதுகாப்பாக காப்பாற்றினர்.
அதனையடுத்து சிவகாமியிடம் நடத்திய விசாரணையில், “தனக்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் அருகில் உள்ள, நில உரிமையாளர்களுக்கும் பாதைப் பிரச்சனை கடந்த ஆறு மாதங்களாக உள்ள நிலையில், காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரை விசாரிக்க அங்கு பணி செய்யும் உதவி காவல் ஆய்வாளர் கண்ணம்மா என்பவர் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றும், எதிர்தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டும் புகார் பெறப்பட்ட சான்றிதழ் (சி.எஸ்.ஆர்) வழங்காமல் மிரட்டியுள்ளார்.
தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன் இருவேறு பிரச்னைகளில் இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி அதனால் தனக்கு உரிய நீதி வேண்டும் என்றும், சிறப்பு உதவி ஆய்வாளரை கண்டித்து, சிவகாமி இன்று(டிச.21) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.
’தீக்குளிக்க தான் வந்தேன்... நடவடிக்கை எடுங்க’
இதேபோல் தர்மபுரியை அடுத்த சவுளுப்பட்டியைச் சேர்ந்த சாரா என்பவர் பேசுகையில், ”தனது 2.5 ஏக்கர் விவசாய நிலத்தை, மதிகோண்பாளையத்தைச் சேர்ந்த ஜீவா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, தன்னை மிரட்டி வருகிறார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நிலப்பிரச்னையைத் தீர்த்து வைக்கக்கோரியும், தன்னை ஏமாற்றி வரும் ஜீவா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சாரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளார்.
அப்பொழுது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றினர். இந்நிலையில் தனது நிலப் பிரச்னையைத் தீர்த்து வைக்கக்கோரி தீக்குளிக்க வந்ததாக காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருவேறு நிலப் பிரச்னை தொடர்பாக தீக்குளிக்க முயற்சி செய்த சிவகாமி மற்றும் சாரா இருவரையும் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் நிலப் பிரச்னை தொடர்பாக காவல் துறையினரைக் கண்டித்து தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்