தமிழ்நாடு உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தருமபுரியில் இன்று (டிச. 06) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”சூரப்பா விவகாரத்தில் உண்மைநிலை தெரியாமல் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கிறார்.
கட்சியை ஆரம்பித்து தேர்தலைச் சந்திக்கப் போகிறோம் என்பதற்காக எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார். ஊழல் புகார் எழுந்ததால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”முன்னதாக தன்னிடத்தில் எவ்வித ஊழலும் இல்லை எனத் தெரிவித்த சூரப்பா, தற்போது மதுரையில் ஒருவரை வைத்து வழக்குப்போட வைத்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சம்பந்தமில்லாத மதுரையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையில்தான் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். மடியில் கனமில்லாதவர் ஏன் பயப்படுகிறார்?
பேராசிரியர் நியமனத்தில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அதேபோல் துணைவேந்தர் நியமனத்திற்கும்கூட தொடர்பில்லை. துணைவேந்தர் நியமனத்திற்குத் தேடுதல் குழுவை அமைப்பது மட்டுமே அரசின் பணி. இதில் தேடுதல் குழுதான் விண்ணப்பங்களைப் பெற்று மூன்று பேரை தேர்வுசெய்து ஆளுநருக்கு அனுப்பிவைக்கிறது.
பேராசிரியர் நியமனத்தில் ஏற்கனவே முன்னாள் துணைவேந்தர் கொடுத்த பத்திரிகை செய்திக்காக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசின் மீது ஏதேனும் புகார் கூற வேண்டும் என்பதற்காகவே கமல் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்ற மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு, ”எதிர்க்கட்சித் தலைவரின் வேலை அதுதான், கரோனா காலத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே வீட்டிலிருந்தபடியே அறிக்கையை மட்டும் கொடுத்துவந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா குறித்து ஆய்வுசெய்து அதனைத் தடுக்கும்வகையில் அறிவுரை வழங்கிவருகிறார்.