அரசு கல்வி நிலையங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து தர்மபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில், பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் பாலக்கோடு பேருந்து நிலையம், பென்னாகரம் பேருந்து நிலையம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி முதலமைச்சர், பாமக நிறுவனர் ராமதாஸுக்கு நன்றி தெரிவித்தனர்.
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நன்றி தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
திருப்பத்தூர்
வன்னியர் சமூகத்திற்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வழங்கியதையடுத்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வாணியம்பாடி நகர செயலாளர்கள் கோபால் அரிகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான அரசு வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்பட பாடுபடுவோம் என பாமகவினர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தனர்.