கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் பார்வையிட்டார். பின்னர், யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட், பியூச்சர்ஸ் கலாம்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட் சார்பில் 3 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதில் 10,465 பனை விதைகளைக் கொண்டு தொல்.திருமாவளவனின் முகம் உருவாக்கப்பட்டது சாதனையாக கருதப்பட்டது. அதேபோன்று 3,046 பேர் திருமாவளவனின் முகமூடியை அணிந்துக் கொண்டு அம்பேத்கரின் உருவமாக நின்றனர் மற்றும். நெகிழிக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் துணிப்பையுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டதும் மற்றொரு சாதனை நிகழ்வாக கருதப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் பனை விதைகளை ஊன்றுவது தொடர்பான செயல் திட்டத்தினை நாங்கள் முன்னெடுத்தோம் தொடர்ச்சியாகப் பல லட்சக்கணக்கான பனை விதைகளை ஊன்றினோம் அதைத் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தில் கடலூரில் 10 ஆயிரத்து 465 பனை விதைகளைக் கொண்டு என்னுடைய முகத்தினை வடிவமைக்கும் ஒரு செயல்திட்டம் உலக சாதனை என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அதேபோல் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் உருவத்தை என்னுடைய முகமூடியை அணிந்து அதில் 3046 பேரும் அவருடைய உருவமாக கட்டமைத்து இருக்கிறார்கள்.
தமிழ் மண்ணில் நீண்ட நெடுங்காலமாக இயற்கை பேரழிவுகளில் இருந்து மண் வளத்தை, நீர்வளத்தைப் பாதுகாத்து வருகின்ற பனை மரத்தை பாதுகாக்க வேண்டும், அதை மென்மேலும் தீவிரப்படுத்த வேண்டும். என்கின்ற அடிப்படையில் உலக சாதனை நிகழ்வுகளை அரங்கேற்றி இருக்கிறோம் அத்துடன் மண்வளத்தை பெரிதும் பாதிக்கக் கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது குறிப்பாக பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்தக் கூடிய வகையில் அம்பேத்கர் முகத்தை வடிவமைத்து நின்ற 3046 பேரும் 'பிளாஸ்டிக்கை ஒழிப்போம், துணிப்பைகளை பயன்படுத்துவோம்' என்று முழக்கம் எழுப்பி இருக்கிறோம் ஒரே நேரத்தில் மூன்று உலக சாதனை நிகழ்ச்சியாக நடைபெற்றிருப்பது ஊக்கத்தை அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வாக நாங்கள் கருதுகிறோம்.
உலக சாதனை நிகழ்ச்சியில் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளன் பேட்டி பிரதமர் மோடி அவர்களும் சீன அதிபர் ஜின்பிங் அவர்களும் இரண்டு நாட்கள் மாமல்லபுரத்தில் தங்கியிருந்ததன் மூலம் தமிழர்களின் தொன்மையான நாகரீகம் குறித்த உரையாடல் வரலாற்றுப் பூர்வமான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த உறவுகள் ஆகியவை குறித்து ஒரு விரிவான உரையாடல் உலகம் தழுவிய அளவில் நிகழ்ந்திருக்கிறது என்கின்ற வகையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் மற்றபடி இதில் அரசியல் ரீதியாக கருத்து சொல்ல விரும்பவில்லை.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஒரு தலித் மாணவனை சக மாணவன் முதுகில் ஆழமாக பிளேடு கொண்டு கிழித்து இருக்கிறான் இப்படிப்பட்ட இந்த கொடுரமான செயல் தொடர்நது வளர்ந்து வருவதற்கு காரணம் அரசியல் களத்தில் இருக்கக்கூடிய சாதியவாதிகள் மதவாதிகள் தான். சின்னஞ்சிறு பிஞ்சுகளின் கைகளில் சாதி அடையாளங்களைக் கொண்ட கயிறுகளை கட்டி விடுவது அவர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் சாதி அடையாளங்களை ஒட்டி அனுப்புவது இப்படி பிஞ்சு உள்ளத்தில் சாதிய அரசியல்வாதிகள் ஆதாயம் கருதி பரப்பி அதன் விளைவாக இன்றைக்கு பள்ளி மாணவர்களிடையே சாதிய உணர்வு மேலோங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது இதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேட்டியளித்தார்.
இதையும் படிக்க: பரிதி இளம்வழுதி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி; திருமாவளவன் பேச்சு!