கடலூர்மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகில் சரவணன் என்பவர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் டெல்டா விவசாயிகளை ஒருங்கிணைத்து 'வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' என்ற பெயரில் விளைபொருட்களை வாங்கி வணிகம் செய்து வருகின்றார்.
இவரிடம் மணிவண்ணன் என்னும் சேலத்தைச்சேர்ந்த முகவர் கறுப்பு உளுந்தை வாங்கி, விளம்பரம் செய்து விற்று, அதன் அசல் தொகையை சரவணனிடம் கொடுத்துவந்தார்.
இந்நிலையில் மணிவண்ணனிடம், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த நிலோஃபர் (38) எனும் பெண் தான் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உளுந்து உள்ளிட்ட தானியங்களை வாங்கி, அதனை சில்லறையாக விற்பனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் தனக்கு உளுந்தினை வாங்கித்தர மணிவண்ணனிடம் உதவி கேட்டுள்ளார். மணிவண்ணனும் இதுதொடர்பாக உளுந்து கொடுத்து உதவுமாறு சரவணனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை நம்பிய சரவணன் சுற்றியுள்ள விவசாயிகளிடம் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில், ரூபாய் ஏழு லட்சத்திற்கும்மேல் மதிப்புடைய 10 ஆயிரத்து 350 கிலோ உளுந்தை வாங்கி, அதனை மணிவண்ணன் என்பவர் மூலம் நிலோஃபருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், உளுந்தை வாங்கிக்கொண்ட நிலோஃபர், அதற்கான பணத்தைத் தராமல் மோசடி செய்துவிட்டார். எனவே, நிலோஃபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் எஸ்.பி. சக்திகணேசனிடம் பாதிக்கப்பட்ட சரவணன் புகார் அளித்தார்.