கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிதம்பரம் ஆருத்ரா விழா
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, சிதம்பரம் ஆருத்ரா விழா 31ஆம் தேதி வரை மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து கோயிலில் தினந்தோறும் காலை மாலை என இரு வேளையில் பூஜைகளும், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றன.
நடராஜர் தேர் வீதி உலா நடைபெறுமா ஆருத்ரா விழா பக்தர்களுக்கு அனுமதி
ஆனால், இந்த உற்சவத்தில் அம்மாவட்டத்தைத் தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சாகமூரி அறிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் தேதி ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றினைத் தாக்கல்செய்தார்.
அம்மனுவில், “பிற மாவட்ட பக்தர்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பதற்கு பதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் தனி மனித விலகல் நடைமுறைகளைப் பின்பற்றி கூட்டத்தை முறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம். பிற மாவட்ட மற்றும் பிற மாநில பக்தர்களுக்கு தனி மனித விலகல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பிற மாவட்ட பக்தர்களும் கலந்துகொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது.
தீட்சிதர்கள் எதிர்ப்பு
சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தேர்த்திருவிழா இன்று (டிச. 29) நடைபெறவிருந்த நிலையில் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாவட்ட நிர்வாகம் ஆன்லைன் மூலம் அனுமதி சீட்டு பெற வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது, இதற்கு நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
"ஆன்லைனில் அனுமதி சீட்டு முறையை ரத்துசெய்யாவிட்டால் 29ஆம் தேதி காலை நடராஜ பெருமானும் சிவகாமசுந்தரி அம்மனும் தேர்களுக்கு கொண்டுவரப்படாமல் நடராஜர் கோயில் உள் வளாகத்திலேயே சுற்றிவந்து ஆயிரக்கால் மண்டபத்தில் முன் முகப்பில் கொண்டுவைக்கப்படும்.
நடராஜர் தேர் வீதி உலா நடைபெறுமா
இதில் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். இது எங்கள் பொது தீட்சிதர்கள் அவசர கூட்டத்தில் நேற்று (டிச. 28) இரவு எடுக்கப்பட்ட முடிவின்படி அறிவிக்கப்படுகிறது" என நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் டிரஸ்டி தங்கராஜ் தீட்சிதர் தெரிவித்தார்.
அதுபோல் 30ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் எல்லா பக்தர்களும் கலந்து கொள்ளும் வகையில் நடைபெறும் என்றும் மேலும் நடராஜர் ஆருத்ரா தேர்த்திருவிழா கடந்த ஆனிமாதம் போல் கோயிலின் உள்ளேயே நடைபெறுவதாக தீட்சிதர்கள் அறிவித்துள்ளதால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், காவல் துறையினர் முகாமிட்டு உள்ளனர்.
அதிகாலை நடராஜப் பெருமானும் சிவகாமி சுந்தரி அம்மனும் ரதயாத்திரை செல்வதற்கு முன் சில மணி நேரங்களுக்கு முன்பாக கூட ஆன்லைனில் அனுமதி சீட்டு ரத்து என்ற அறிவிப்பை கடலூர் மாவட்ட நிர்வாகம் முறைப்படி அறிவித்தால் நடராஜ பெருமானும் சிவகாமி சுந்தரி அம்மன் தேர்களுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு வீதிகளிலும் தேர்ப்பவனி நடைபெறும் என்பதைத் தெரிவிப்பதாக பொது தீட்சிதர்கள் அறிவித்துள்ளனர். இதனால் சிதம்பரம் பரபரப்பாகவும் பதற்றமாகவும் உள்ளது.