கடலூர் :கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வார நாள்கள் இரவு நேர ஊரங்கும், ஞாயிற்று கிழமை மட்டும் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. கோவில்களில் திருமணம் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முகூர்த்த நாளான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் முன்பு திருமண ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் திரண்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் மலைமீது உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் முன்பு உள்ள சாலையில் 100க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர்.
மேலும் திருவந்திபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களிலும் 50க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இன்று (ஜன.23) காலை நடைபெற்ற பெரும்பாலான திருமணத்துக்கு வந்திருந்த பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் திருமணத்தை நடத்தி வைப்பவர்களும் முககவசம் அணியாமல்,தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் ஒரே இடத்தில் திரண்டு இருந்ததால் தொற்று நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் நிலவியது.
திருவந்திபுரம் கோயில் சாலையில் குவிந்த திருமண ஜோடிகள் எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதுபோன்ற முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய விழா நாள்களில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்கள் கூட்டம் சேராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : வீடு கட்டித் தருவதாகக் கூறி ஏமாற்றிய அலுவலர்கள் - பெண் பிள்ளைகளுடன் தவிக்கும் தாய்