கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட விலங்கல்பட்டு ஊராட்சியில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் நான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் மோகனாவின் கார் சின்னம் வாக்குச்சீட்டில் பதிவாகவில்லை.
இந்நிலையில், தேர்தல் அலுவலர்கள் உயர் அலுவலர்களிடம் கலந்தாலோசித்து அதுவரை பதிவுசெய்யப்பட்ட 32 வாக்குகள் செல்லாது என அறிவித்து மீண்டும் வாக்குப்பதிவை தொடங்கினர்.
இதற்கு 32 வாக்காளர்களும் வேட்பாளர் மோகனாவின் ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து , மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி விலங்கல்பட்டு ஊராட்சி 4ஆவது வார்டு ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மட்டும் ஜனவரி ஒன்றாம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
கடலுரில் தொடங்கிய மறுவாக்குப்பதிவு இதையடுத்து, இன்று வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவில் மக்கள் காலை 7 மணியிலிருந்து வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். முதல்கட்ட வாக்குப்பதிவின்போது, வாக்காளர்களித்தவர்களுக்கு ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெறும் மறுவாக்குப்பதிவில் நடு விரலில் மை வைக்கப்பட்டுவருகிறது. இந்தத் தேர்தலில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தேனியில் மறுவாக்குப்பதிவில் குறைந்த வாக்குகள்!