கடலூர் தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.ரமேஷை ஆதரித்து விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜி. ராமகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
பாஜக, அதிமுக, பாமக சந்தர்ப்பவாத கூட்டணி - ஜி.ராமகிருஷ்ணன்
கடலூர்: பாஜக, அதிமுக, பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, இந்தக் கூட்டணிகளுக்கு கொள்கை எதுவும் இல்லை என ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்து பேசினார்.
தேர்தல் பரப்புரையின் போது மக்களின் முன்பு உரையாற்றிய ராமச்சந்திரன், மத்திய அரசின் கையில் உள்ள 4 ஜி அலைக்கற்றை வசதியை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தராமல் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து இருக்கிறது. பாஜக, அதிமுக, பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி இந்தக் கூட்டணிக்கு கொள்கை எதுவும் கிடையாது. ஆனால், திமுக தலைமையிலான கூட்டணிக்கு கொள்கை உண்டு, கடந்த காலத்தில் பஸ் கட்டண உயர்வு நீட் தேர்வு எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் திமுகவும் கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து போராடி இருக்கின்றோம்.
என்எல்சி நிறுவனத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்கள் நலனுக்காக பல கட்டப் போராட்டங்களை நடத்தி தொழிற்சங்கங்களை நடத்தி வருகிறோம். தற்போது தொழிலாளர்கள் நலனுக்காக தொழிற்சங்க நிர்வாகிகள் குரல் கொடுத்தால் தொழிற்சங்க நிர்வாகிகள் விளக்கம் கேட்பது, இடமாற்றம் செய்வது போன்ற அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு என்எல்சி நிர்வாகம் மிரட்டி வருகிறது என குற்றம்சாட்டினார்.