விருத்தாசலம்:கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியின் 30-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி. இவர் விருத்தாசலம் பகுதியில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். கவுன்சிலர் பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 5 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்கிரிசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பக்கிரிசாமி திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கிரிசாமி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணை நடத்தி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். திமுக நகர் மன்ற உறுப்பினர் என தெரியவந்ததும் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மழைநீர் வடிகால் பணியால் பாதிப்படைந்த வீடு.. பணம் கேட்கும் திமுக கவுன்சிலர்.. கரூரில் பரபரப்பு!