கடலூர்: கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றின் கரையோரத்தில் நகராட்சி சார்பில் குப்பைகள் எரிக்கப்பட்டுவருகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில்கூட, இரவில் அங்கு குப்பைகள் தொடர்ந்து எரிக்கப்பட்டுவருகின்றன.
மருத்துவக் கழிவுகள் எரிப்பு
நத்தப்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில், சுமார் 100 பேர் மருத்துவம் பெற்றுவருகின்றனர்.
இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்கள் ஆகியோர் பயன்படுத்திய பிபிகிட் உடை, கையுறை, சானிடைசர், முகக்கவசம், உணவு உள்ளிட்ட கழிவுகளை ஒன்றாக்கி, கெடிலம் ஆற்றின் கரையோரம் தீவைத்து எரித்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்பட்டது.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இது தொடர்பாக, அப்பகுதி நகர மன்ற முன்னாள்உறுப்பினரும், திமுக நகரச் செயலாளருமான ராஜா, அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.
அதன்படி, நகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று மருத்துவக் கழிவுகளைக் கொட்ட பயன்படுத்திய தனியார் டிராக்டரைப் பறிமுதல்செய்தனர். மேற்கொண்டு இதுபோன்று வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
கரோனா தொற்று கழிவுகளை பாதுகாப்பு வழிமுறைகளோடு அழிப்பதற்கு ஐசிஎம்ஆர் வழி முறைகளை உருவாக்கி உள்ள நிலையில், குப்பைகளை ஆற்றில் கொட்டி எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:5 மாதங்களில் 209 காவலர்கள் உயிரிழப்பு: காரணம் என்ன?