நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிவரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 12ஆம் தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு வந்த வருமான வரித்துறை அலுவலர்கள் விஜய்யை தங்களுடன் அழைத்துச் சென்று பின்னர் சென்னையிலுள்ள அவரது வீட்டில் சோதனை செய்தனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே கடந்த 6ஆம் தேதி முதல் மீண்டும் என்எல்சியில் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜகவினர் சிலர் விஜய்யின் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி என்எல்சி சுரங்க நுழைவு வாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.