கடலூர்:சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இதில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 13) மதியம் பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் படிக்கும் மாணவர்கள் சஞ்சய், அஜய் குமார், நெக்ஸா பாலன், சுசீந்திரன், சூர்யா, சந்துரு உள்ளிட்டோரை அந்தப் பள்ளியின் ஆசிரியர் சுப்பிரமணியன் தனது வகுப்புக்கு ஏன் வரவில்லை எனக் கேட்டு ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த கம்பால் அடித்து காலால் உதைத்துள்ளார்.
மாணவனை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர் இந்தக் காட்சியை சக மாணவர்கள் தங்களது செல்போனில் பதிவுசெய்து, அதனைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்தக் காட்சி வைரலாகப் பரவிவருகிறது. அரசுப் பள்ளியில் மாணவனை ஆசிரியர் தாக்கும் காட்சி பெற்றோர் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதையடுத்து ஆசிரியர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடையே மோதல்: வைரலாகும் காணொலி