கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்துரு(21). இவர், கடலூர் சிப்காட்டிலுள்ள ஒரு தொழிற்சாலையில் எலக்ட்ரிசனாகப் பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம் போல் சந்துரு வேலைக்குச் சென்றார். அப்போது, திடீரென சந்துருவின் உறவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தொழிற்சாலை தரப்பினர், வேலை செய்து கொண்டிருக்கும் போது சந்துருவுக்கு அடிபட்டதாகவும் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்ட சந்துருவின் உறவினர் கடலூர் அரசு மருத்துவ மனைக்குச் சென்று பார்த்தபோது, சந்துரு இறந்துவிட்டதாகவும் அவரது உடலை உடற்கூறாய்விற்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சந்துருவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.