கடலூர்:சமூக நீதி பயணத்தின் நிறைவு விழாவாக கடலூரில் திராவிட கழக தலைவர் வீரமணிக்கு பாராட்டு தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன், சமூக நீதி பற்றி எடுத்துரைத்துரைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஆளுங்கட்சி அந்தஸ்தில் இருக்கின்ற பாஜக அரசு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூச்சல் எழுப்பி நாடாளுமன்றத்தையே முடக்கிய வரலாறு, மோடி ஆட்சியில் அமைந்துள்ளது. தனிநபரை காப்பாற்ற ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையே முடக்கி போடுவது தேச விரோத செயலாகும். மோடி அரசு அதானி அரசு என்று சொல்லக்கூடிய வகையில் இந்த ஆட்சி நிர்வாகத்தில் அதானி ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஹிண்டன்பெர்க் அறிக்கை, பங்குச்சந்தையில் அதானி செய்து இருக்கிற ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது. அது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் கோரிக்கை. மோடி அரசு நேர்மை தனம் உள்ள அரசாக இருந்தால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை கூட்ட ஆணையிட்டு இருக்க வேண்டும். இரு அவைகளையும் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்" என கூறினார்.
மேலும், "ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும்கட்சியினர் நாள்தோறும் மக்கள் அவையிலும் மாநில அவையிலும் கூச்சல் எழுப்பி, அனைத்தையும் திசை திருப்பும் விதமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போக்கு, வன்மையான கண்டனத்திற்கு உரியது. அது மட்டுமல்லாமல், ஒரு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருடைய எம்பி பதிவையும் தகுதி நீக்கம் செய்திருக்கிறார்கள்.
இது தன்னியல்பாக நடந்த சட்ட நடவடிக்கை அல்ல, இது திட்டமிட்ட அரசியல் சதி என்று யூகிக்க முடிகின்றது. இந்த எதேச்சாதிகார போக்கை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜனநாயக பாதுகாப்பு அறப்போராட்டம் நடைபெற்றது. அதனுடைய தொடர்ச்சியாக, வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று தமிழக மாவட்ட தலைநகரங்களில் ஜனநாயகம் காப்போம் என்ற அறப்போராட்டத்திலும், அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்தும் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை, சமத்துவ நாள் உறுதிமொழியாக ஏற்க உள்ளோம்" என்று கூறினார்.
அதோடு, "ராகுல் காந்தி என்ற தனிநபருக்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறது என்று சுருக்கி பார்த்து விட முடியாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக, ஜனநாயக மரபுகளுக்கு எதிராக மோடி அரசு கொடூரமான தாக்குதலை கொடுத்திருக்கிறது. எனவே, மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவது நாட்டு மக்களுக்கு நல்லதல்ல. அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் தீங்கினை விளைவிக்கும். எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றது.
திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதச்சார்பு முற்போக்கு கூட்டணி எப்படி தமிழகத்தில் ஒரு முன்மாதிரியாக இருக்கின்றதோ அது போன்று அனைத்து மாநிலங்களிலும் பாஜக எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவில் அரசியல் தில்லுமுல்லு செய்து பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்தார்கள். அது முறைப்படி அமைந்த அரசியல் அல்ல. அதுவும் இப்பொழுது மக்களால் அப்புறப்படுத்தப்படும். அதன்பின், தென்னிந்தியாவில் அவர்களின் அடிச்சுவடி இல்லை என்ற அளவிற்கு துடைத்தெறியப்பட உள்ளனர்.