கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன், ஹேமலதா தம்பதியினர். இவர்களின் மூன்று மாத ஆண் குழந்தை சஷ்வின். இன்று காலை ஹேமலதா தனது குழந்தை சஷ்வினை கவனித்துள்ளார்.
அப்போது குழந்தையின் உடல் எவ்வித அசைவுமின்றி காணப்பட்டது. இதைக் கண்டு அதிர்ந்த ஹேமலதா சஷ்வினை எழுப்ப முயன்றார். பின்னர் உறவினர்களும் சஷ்வினை எழுப்பியுள்ளனர். ஆனால் குழந்தையிடம் எவ்வித உணர்ச்சியும் இல்லை.
இதையடுத்து குழந்தை சஷ்வினை நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக விரைந்து கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முன்னதாக நேற்றுதான் நடுவீரப்பட்டில் நடந்த மருத்துவ முகாமில் சஷ்வினுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று மாலை (ஜூலை 2) சஷ்வீனுக்கு ஜூரம் வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் குழந்தை சஷ்வின் இன்று (ஜூலை 3)உயிரிழந்துள்ளார். இது சஷ்வினின் பெற்றோர் கோபாலகிருஷ்ணன், ஹேமலதா ஆகியோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடலுடன் அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். குழந்தையின் உயிரிழப்பிற்கு காரணம் நேற்று போடப்பட்ட தடுப்பூசி எனவும், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீதும், செவிலியர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தடுப்பூசியால் உயிரிழப்பா? குழந்தையின் உடலை மடியில் கிடத்தியிருந்த தாய் ஹேமலதா, “ எப்போதும் போலதான் இருந்தான். நேற்று காலை தடுப்பூசிப் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்தோம். மதியம் குழந்தை வழக்கம் போலதான் இருந்தான். ஆனால் நேற்று மாலை ஜூரம் வந்தது. இரவில் இரண்டு முறை தூக்கத்தில் எழுந்து கொண்டான். பசி என நினைத்து பால் கொடுத்து தூங்க வைத்தேன். காலையில் உடலில் எவ்வித அசைவுமின்றி இருந்தான். தடுப்பூசியால்தான் எல்லாம் வந்தது. என் மகன் என்னை பிரிந்துவிட்டான்” என கண்ணீர் மல்கக் கூறினார்.
இது தொடர்பாக குழந்தையின் உறவினர்கள் தெரிவிக்கும்போது, “ இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை விசாரணை செய்யவேண்டும். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்” என்றனர்.
இதையும் படிங்க:உலகிலேயே மலிவான விலையில் கரோனா தடுப்பூசியை தயாரிப்பதுதான் நோக்கம்!