கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணவாளநல்லூரில் பிரசித்திப் பெற்ற கொளஞ்சியப்பர் கோயில் உள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக இக்கோயில் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வராமல் வெறிச்சோடி இருந்த நிலையில், அக்கோயில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலாளி சிவக்குமார் கோயில் வளாகத்தில் மது அருந்திவிட்டு இறைச்சி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம் இந்துசமய அறநிலைத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் கோயில் வளாகத்தில் மது அருந்திவிட்டு இறைச்சி சாப்பிட்ட கோயில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.