கடலூர்: மேல்பட்டாம்பாக்கம் எனும் கிராமத்தில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடலூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து நெல்லிக்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பண்ருட்டியில் இருந்து எதிரே வந்த துர்கா என்ற தனியார் பேருந்தில் டயர் வெடித்ததில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதின.
இந்த கோர விபத்தில் இரு தனியார் பேருந்து ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர் மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உயிரிழந்தனர். விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் ஐந்துக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து பலி ஐந்தாக உயர்ந்தது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், “விபத்து குறித்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன்.
மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோரை மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: சென்னை கனமழை...... பாதிக்கப்பட்ட விமான சேவை