கடலூர்: கடலூர் பேருந்து நிலையம் மற்றும் ஜவான் பவன் சாலையில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில், திருநங்கைகள் சிலர், அவ்வழியாகச் செல்லக்கூடிய நபர்களிடம் ஆபசமாக பேசி தவறாக நடந்து கொள்வதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. மேலும் சில நேரங்களில் உல்லாசத்திற்கு அழைத்துச் செல்லும் ஆண்களிடம் அத்துமீறுவதோடு, அவர்கள் வைத்திருக்கும் பொருள்களை மிரட்டி வாங்கிக் கொண்டு செல்வதாகப் புகார்கள் வந்தன.
இந்த நிலையில் நேற்றிரவு (அக்.03) கடலூர் பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த இரண்டு திருநங்கைகள், அந்த இளைஞரை உல்லாசத்திற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. 500 ரூபாய்க்கு உல்லாசமாக இருக்கலாம் என அழைத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரிடம் கட்டாக இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திடீரென இரண்டு திருநங்கைகளும் பறித்துக் கொண்டனர். மேலும் அந்த இளைஞரை மிரட்டி அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் இது குறித்து கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த காவல் துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு திருநங்கைகளையும் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடம் சோதனை செய்தபோது இளைஞரிடம் இருந்து பறித்த 93 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.