தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-4 பணியிடங்களுக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியாகின. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றது அலுவலர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் நடத்திய விசாரணையில், தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. மேலும், இவர்களில் மூன்று பேர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. முறைகேட்டிற்கு உதவியாக இருந்த ராஜசேகர் என்பவரை சிபிசிஐடியினர் அண்மையில் கைதுசெய்திருந்த நிலையில், இது தொடர்பாக அவரது உறவினரான சீனிவாசனையும் செஞ்சி காவல் துறையினர் கைதுசெய்தனர்.