தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர் காப்பானுக்கு ட்விட்டரில் பாராட்டு மழை..! - திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்ஜுன் சரவணன்

கடலூரில் லாரியின் குறுக்கே சைக்கிளை ஓட்டி விபத்தில் சிக்கவிருந்த மாணவனை நூழிலையில் காப்பாற்றிய போக்குவரத்துக் காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

tirunelveli-sp-arjun-saravanan-praised-traffic-cop-on-twitter

By

Published : Sep 16, 2019, 1:14 PM IST

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை சாலைகளின் தாறுமாறாக இயக்கி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், வாகனங்களை இயக்குவது, சாலை விதிமுறைகளை மீறி, சட்டம் வகுத்துள்ள நடைமுறைகளை காற்றில் பறக்கவிட்டு இன்று வாகன ஓட்டிகள் பலரும் அலட்சியம் காட்டுகின்றனர்.

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணிப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் தாறுமாறாக வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றகரமான செயல்களில் இளம் தலைமுறையினர் ஈடுபடுவதை அதிகமாகப் பார்க்க முடிகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசும், காவல் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

பாதசாரிகளும் சாலைகளைக் கடக்கும்போதும், சாலை ஓரங்களில் நடக்கும்போதும் கவனம் கொள்ள வேண்டும். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சாலையைக் கடக்க முயன்ற மாணவர் ஒருவர் தனது மிதிவண்டியுடன் லாரியின் குறுக்கே சிக்கவிருந்தார்.

லாரியின் குறுக்கே பாயவிருந்த சிறுவனை காப்பாற்றிய காவலர்
அந்த மாணவனை போக்குவரத்துக் காவலில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர் ராஜதீபன் என்பவர் தடுத்துநிறுத்தி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார். பின்னர் அந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கி அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்ஜுன் சரவணன், போக்குவரத்துக் காவலர் ராஜதீபனை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

அதில், மக்களின் உயிரைக் காப்பவரே "காப்பான்" என்றால் போக்குவரத்துக் காவலர் ராஜதீபன்தான் இன்றைய ரியல் "காப்பான்". என்று குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுபோன்று பல்வேறு தரப்பினரும் காவலர் ராஜதீபனுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அனைத்து இடங்களிலும் நம்மைக் காப்பாற்ற காவலர்கள் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து, சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உறுதிசெய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே விபத்துகளை குறைக்கவும் தடுக்கவும் முடியும்.

ABOUT THE AUTHOR

...view details