கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரைமேடு பெரியாண்டவர் கோயில் அருகில் காவல் உதவி ஆய்வாளர் ஜோதி தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை வழிமறித்து சோதனை செய்ய முயன்றபோது ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் லாரியை சோதனை செய்த போது, அதில் மணல் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ரெட்டிச்சாவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தப்பியோடிய லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டம், பெரிச்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் திருக்குமரன் (23) என்பது தெரியவந்தது.
பெரிச்சம்பாக்கம் பகுதிக்கு சென்ற காவல் துறையினர் திருக்குமரனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் திருக்குமரனை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் அவர் தற்போது ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இதேபோல் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி இரவு சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக குமராட்சி ஒன்றிய அமமுக செயலாளர் மில்லர் என்பவருக்கும், தியேட்டர் மேலாளர் மாரி அலெக்சாண்டர் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மில்லர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தியேட்டர் மேனேஜர் மாரி அலெக்ஸாண்டரை அசிங்கமாக பேசியது மட்டுமல்லாமல், அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துக்கொண்டு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாரி அலெக்சாண்டர் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளான சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகன் கிருபாகரன் 21, கமலக்கண்ணன் மகன் சூர்யா 22 ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதேபோல் இவர்களின் குற்றச் செயலை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஒராண்டு காலம் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் இருவரையும் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க:பொள்ளாச்சி கொடூரம்: திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டம் ரத்து