கடலூர்: சென்னை சூளைமேடு பகுதியில் பள்ளிக்குச் சென்று தாயுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த 9 வயது சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் கடலூரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடலூர் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர் லோகேஷ்வரன் (15). இந்த சிறுவன் கடலூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்ததும், லோகேஷ்வரன் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளார். அப்போது அவர், சில்வர் பீச்சில் சவாரி செல்லும் குதிரையின் அருகில் சென்றபோது, திடீரென அந்த குதிரை லோகேஷ்வரனை கடித்துள்ளது.
இதில் பதறிய சிறுவன் அங்கிருந்து ஓடத் தொடங்கியுள்ளார். இருப்பினும் அந்த குதிரை விடாமல் துரத்திச் சென்று சிறுவனை கடித்ததுடன், காலால் உதைத்துள்ளது. மேலும் சில்வர் பீச்சில் பஜ்ஜி கடை வைத்திருந்த தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பத்மாவதி (60) என்பவரையும், தேன்மொழி என்பவரையும் அந்த குதிரை கடித்து விட்டு, தேவனாம்பட்டினம் ஊருக்குள் ஓடியுள்ளது. தற்போது குதிரை கடித்ததில் லோகேஷ்வரன், பத்மாவதி மற்றும் தேன்மொழி ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர்.
அதன் பிறகு அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே தேவனாம்பட்டினம் காவல் துறையினர், குதிரையின் உரிமையாளர் உதவியுடன் அந்த குதிரையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது குதிரை வேகமாக ஓடியுள்ளது. பின்னர் பொதுமக்களும் அதைத் துரத்திக் கொண்டே சென்றுள்ளனர்.