கடலூர்:தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சம்பத்தும், திமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ. ஐயப்பனும் போட்டியிட்டனர். திமுகவிலிருந்து விலகிய கோ. ஐயப்பன் கடந்த 9 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்புதான் மீண்டும் திமுகவில் இணைந்தார்.
தேர்தலின் போது கடலூர் ஒன்றியப் பகுதியில் அதிமுக, திமுகவினரிடையே சிறு சிறு மோதல் ஏற்பட்டு வந்தது. தேர்தலுக்கு முன்பே அதிமுகவின் கடலூர் ஒன்றிய பெருந்தலைவர் தெய்வ பக்கிரி திமுக பிரமுகருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தார் என புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் அருகே திமுக அதிமுகவினரிடையே மோதல் மூவர் படுகாயம் இந்நிலையில், கடலூர் மாவட்டம் உள்ளேரிப்பட்டு கிராமத்தில் இன்று கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சீங் பவுடர் தூவும்போது திமுக, அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், திமுகவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் அதிமுக சட்டப்பேரவை வேட்பாளர் சம்பத்துக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்ட உள்ளேரிப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சூர்யா, சரண்ராஜ், சுபாஷ் ஆகிய மூன்று பேரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த மூவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஒன்றிய பெருந்தலைவர் தெய்வ பக்கிரியின் வீடு, கடைகள் ஆகியவற்றையும் ஆயுதங்கள் கொண்டு திமுகவினர் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தூக்கணாம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:கூடலூரில் திமுக - அதிமுகவினரிடையே மோதல்: 4 பேர் படுகாயம்..!