கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நேற்று (ஜூன் 1) மட்டும் மாவட்டத்தில் 20 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை மிகவும் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அடக்கம்செய்ய வேண்டும் உள்பட பல பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.
ஆனாலும், அவை கடலுார் அரசு மருத்துவமனையில் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. அங்குள்ள கரோனா வார்டில் அதிகம் கட்டுப்பாடுகள் இல்லை. நோயாளிகளை அவரது உறவினர்கள் சாதாரணமாகப் பார்த்துச் செல்கின்றனர்.
உயிரிழந்த நோயாளிகளின் உடல்களைப் பாதுகாப்பான முறையில் மூடாமல், உடல் மீது துணியை மட்டும் சுற்றி படுக்கையில் வைத்து மருத்துவமனை வெளியில் 500 மீட்டர் தூரம் உள்ள சவக்கிடங்கிற்குத் தள்ளிச் செல்கின்றனர்.
கடலுாரில் கரோனா நோயாளியின் உடலை திறந்த வெளியில் எடுத்துச் செல்லும் அவலம் கடலுார் - நெல்லிக்குப்பம் சாலை வழியாக, திறந்த வெளியில், கரோனா பாதுகாப்பு கவச உடையுடன் ஊழியர்கள் சவக்கிடங்கிற்கு உடலை எடுத்துச் செல்லும் காட்சி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை, பாதுகாப்பான முறையில் ஆம்புலன்ஸ் மூலம் சவக்கிடங்கிற்கு கொண்டுசெல்ல, கடலூர் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:'நெகட்டிவ் என வந்தாலும் கரோனா இறப்பு எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும்'