கடலூர்: கடலூரை அடுத்த தாழங்குடா பகுதியைச் சேர்ந்தவர், மதியழகன் (45). இவரது மனைவி சாந்தி (40) தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர் மற்றும் புதுச்சேரி மாநிலம், வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார்.
இன்று (ஜூன் 27) காலை மதியழகன் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சாமி கும்பிட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அருகில் நெருங்கி வந்துள்ளனர். இதனைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட மதியழகன், அந்த நபர்களைப் பார்த்தபோது கையில் வீச்சரிவாளுடன் கொலை செய்வதற்கு வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து மதியழகன் அங்கிருந்து வேகமாக ஓட தொடங்கினார்.
அப்போது அந்த கும்பல் மதியழகனை துரத்திச் சென்று நடுரோட்டில் சரமாரியாக வெட்டினர். மேலும், மதியழகன் முகத்தில் கடுமையாக வெட்டியதால் முகம் முழுவதும் சிதைந்து உருக்குலைந்தது. இதனால் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். அவரை கொலை செய்த கும்பல் மதியழகன் முகத்தில் வீச்சரிவாளை சொருகி வைத்த நிலையில், அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பித்துச் சென்றனர். கொலை செய்த நபர்கள் 7-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள்களை அந்தப் பகுதிகளில் தூக்கி வீசியது தெரியவந்தது.
இத்தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் சில போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட மதியழகனின் மனைவி ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி மற்றும் அவரது மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக அலறியடித்துக்கொண்டு வந்து சாலையில் கிடந்த மதியழகன் உடலைப் பார்த்து கதறி துடித்து அழுதனர்.
பட்டப்பகலில் நடு ரோட்டில் மதியழகனை ஒரு கும்பல் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறடித்துக் கொண்டு ஓடினார்கள். மேலும் தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். ஆனால், போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அனைவரையும் உடனடியாக கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, தற்போது கொலை செய்யப்பட்டு இறந்த மதியழகன் மனைவி சாந்திக்கும் ஏற்கனவே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாசிலாமணி தரப்பும் போட்டியிட்டனர். அப்போது வாக்குகள் எண்ணும் சமயத்தில் மதியழகன் மனைவி சாந்தி வெற்றி பெற்றதாக அறிவித்தபோது, மாசிலாமணி தரப்பினர் மதியழகனுக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், கொலை மிரட்டல் காரணமாக, தனது மனைவி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் வெற்றி பெற்றாலும் தான் ஊருக்கு சென்றால் தனக்கு என்ன நேரிடுமோ என்ற அச்சத்தில் வாக்கு எண்ணும் மையத்திலேயே காலை முதல் இரவு வரை காத்திருந்து, பின்னர் போலீசார் பாதுகாப்புடன் மதியழகனை ஊருக்கு அழைத்துச்சென்று, இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் எச்சரிக்கை விடுத்து வந்துள்ளனர்.