கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளைக் காட்டி 500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றிடம் வழங்காததை கண்டித்தும் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய திருமாவளவன், 'விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக களப்பணியாற்றும். இந்த இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் என்பது வரும் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், 'ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற முயற்சிக்கின்றனர். அதிமுகவும், பாஜகவும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு இந்த செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டாலும், திமுக கூட்டணியே வெற்றி பெறும்' எனக் கூறினார்.