சளி சிகிச்சைக்கு நாய்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பேண்ட் கடலூர்: கடலுார் அடுத்த கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர், கருணாகரன். கூலித் தொழிலாளியான இவரது மகள் சாதனா (13) எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு சளி தொந்தரவு காரணமாக, நேற்று முன்தினம் (ஜூன் 27) காலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு, அவரது தந்தை கருணாகரன் அழைத்து வந்தார்.
அங்கே இருந்த மருத்துவர், சாதனாவை பரிசோதனை செய்து, ஊசி மற்றும் மாத்திரை எழுதிக் கொடுத்துள்ளார். மருத்துவமனை பார்மசியில் மாத்திரை வாங்கிக்கொண்டு, ஊசி போடச் சென்றார். அங்கிருந்த செவிலியர்கள் சாதனாவிடம் கொடுத்த மருத்துவர் சீட்டை வாங்கிப்பார்க்காமல், இரண்டு ஊசிகளைப் போட்டு உள்ளனர்.
அப்போது, 'சீட்டை பார்க்காமல் என்ன ஊசி போடுகிறீர்கள்' என சாதனாவின் தந்தை கருணாகரன் கேட்டுள்ளார். அதற்கு செவிலியர்கள், 'நாய்க்கடிக்கு இரண்டு ஊசி தான் போடுவார்கள்' எனக் கூறியுள்ளனர். இதனை அடுத்து கருணாகரன், சளிப் பிரச்னைக்கு ஊசி போட வந்ததாகக் கூறியுள்ளார். உடனே செவிலியர்கள் மழுப்பலாக பேசியுள்ளனர். மேலும், 'தெரியாமல் தவறு நடந்து விட்டது, மன்னித்துவிடுங்கள்' எனக் கூறி உள்ளனர்.
இந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்த மாணவி சாதனாவை உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, பணியில் அலட்சியமாக இருந்து சிகிச்சை அளித்த செவிலியர்கள், பணியில் இருந்த மருத்துவர் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாகரன் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் சம்பந்தமாக அரசு தலைமை மருத்துவமனை பொறுப்பு இணை இயக்குநர் அவர்களிடம் ஈடிவி பாரத் கடலூர் செய்திப் பிரிவில் இருந்து தொலைபேசியின் மூலம் கேட்டதற்கு துறை ரீதியான விசாரணை நடைபெற்றது எனத்தெரிவிக்கப்பட்டது. மேலும், செவிலியர் கண்ணகி கவனக்குறைவின் காரணமாக பணி செய்தது தெரியவந்தது, அதை அடுத்து செவிலியர் கண்ணகி இன்று (ஜூன் 29) பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அரசு மருத்துவமனை பொறுப்பு இணை இயக்குனர் சாரா ஷெரின் பால் தெரிவித்துள்ளார்.
கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன் பிரசவ அறுவை சிகிச்சையின்போது கர்ப்பப்பையுடன் சேர்த்து குடல் தைக்கப்பட்ட சர்ச்சை தற்போது பூதாகரமாக சென்று கொண்டிருக்கும் அதே நேரத்தில், மேலும் ஒரு சர்ச்சையாக சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:TNJFU: அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்படும் அலுவலர்கள்.. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் நடப்பது என்ன?