சில நாட்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் சேமிப்பு நிலையங்களிலிருந்து பாட்டில்கள் மூலம் பெட்ரோல் வழங்குவது தடைசெய்யப்படுவதாக பெட்ரோலிய வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து, கடலூரில் பேட்டியளித்த பெட்ரோலிய வணிகர் சங்கத் தலைவர் முரளி, ”பல ஆண்டுகளாகவே பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என்ற தடை இருந்தாலும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் வழங்கப்பட்டுவந்தது. தற்போது தெலங்கானாவில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள், பெட்ரோல் சேமிப்பு நிலைய ஊழியர்கள், டீலர்கள் ஆகியோரின் பாதுகாப்புக் கருதி பாட்டிலில் பெட்ரோல் வழங்குவது இன்று முதல் தடைசெய்யப்படுகிறது” என்றார்.