கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கம் இரண்டில் பாய்லர் வெடித்ததில் எட்டு பேர் உயிரிழந்தனர், 17 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் என்எல்சியில் விபத்து நடைபெற்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நெய்வேலி என்எல்சி சுரங்கம் இரண்டில் மே மாதம் ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் பாதிக்கப்பட்டு அதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இரண்டு மாதம் ஆவதற்குள் இன்று (ஜூலை 1) எட்டு பேர் உயிரிழந்ததாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
மேலும் பலர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது, நாங்கள் வைத்த கோரிக்கை என்னவென்றால் இந்த காலாவதியான பாய்லர்கள் மாற்றப்படவேண்டும். சிமினிகள் மாற்றப்பட வேண்டும். இந்த மின்சார உற்பத்தி நிலையங்களில் உள்ள காலாவதியான அனைத்து உபகரணங்களும் மாற்றப்படவேண்டும். ஒப்பந்தம், நிரந்தர ஊழியர்களுக்கான உயிர் உத்தரவாதம் அளித்த பின்னர் தெர்மல் இரண்டு இயங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.