கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மனைவி சந்திரா. சுந்தரவேல் சிங்கப்பூரில் மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், ஜூலை மாதம் 25ஆம் தேதி விமானம் மூலம் சுந்தரவேல் சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டார். தனியார் நட்சத்திர விடுதியிலிருந்த சுந்தரவேல் இரண்டு நாட்களாக தொலைப்பேசியை எடுக்காததால் சந்தேகமடைந்த அவரது மனைவி சமூக வலைத்தளத்தில் விடுதியின் எண்ணைத் தேடி தொடர்பு கொண்டார்.
அதன்பின்னரே விடுதி ஊழியர்கள் சுந்தர வேலின் அறையை சோதனையிட்டபோது, சுந்தரவேல் இறந்து கிடந்தது தெரியவந்தது. ஏற்கெனவே வயிற்று வலி காரணமாக சுந்தரவேல் சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தேனாம்பேட்டை காவல் துறையினர், சுந்தரவேலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.