கடலூர் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகியின் பட திறப்பு விழாவிற்கு வந்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ விளம்பரப் பலகை தட்டி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் கொடியத் துயரம் என்றும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார். அவருடைய குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் சுபஸ்ரீ குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சுபஸ்ரீ மரணம்: புது சட்டம் இயற்ற திருமாவளவன் வலியுறுத்தல்! - vck party leader thirumavalavan
கடலூர்: விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைப்பது தொடர்பாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், விளம்பரப் பலகைகள் வைப்பது, சுவர் விளம்பரங்கள் செய்வது, கொடி கட்டுவது, தோரணம் கட்டுவது போன்றவற்றில் காவல்துறை ஆளுங்கட்சிக்கு ஒரு அணுகுமுறை எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அணுகுமுறை பிற கட்சிகளுக்கு ஒரு அணுகுமுறை என கையாண்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். ஆளுங்கட்சியினர் எந்த கட்டுப்பாடும் இல்லாமல், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி விரும்பினாலும் கொடி தோரணங்களை கட்ட முடியும், விளம்பரத் தட்டிகளை வைக்கமுடியும் என்றார்.
சுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் இதில் காவல்துறையாக இருந்தாலும் ஆளும் கட்சி தரப்பினராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விளம்பரத் தட்டிகள் வைப்பது தொடர்பாக அரசு எந்த பொது வரையறைகளையும் கொண்டிருக்கவில்லை, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் போதுமானவையாக இல்லை. எனவே இதுதொடர்பாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என்றும் தெரிவித்தார்.