கடலூர்: பள்ளிக்குள்ளேயே ஒரே வகுப்பைச்சேர்ந்த மாணவனும், மாணவியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் காதலி தற்கொலைக்கு முயலப்போவதை அறிந்ததால், அதற்கு முன்பே தானும் தற்கொலை செய்ய முயன்ற காதலனால் இச்சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் விஷம் குடித்ததாக உடன் இருந்த மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் அந்த மாணவனை மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் அதே வகுப்பில் படிக்கும் மாணவியும் விஷம் குடித்ததாக தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவன் மற்றும் மாணவியை கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதனையடுத்து, காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவனும் மாணவியும் காதலித்து வந்ததாகவும் இந்நிலையில் மாணவி 'தனக்கு தோல் வியாதி இருப்பதால், முகத்தில் கறுப்புப் புள்ளிகள் ஏற்படுவதாகத் தெரிவித்து அதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக’ தெரிவித்துள்ளார்.