கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கரோனா பெருந்தொற்று நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போதிய வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இதுவரை அவர்களுக்கு எந்தவித வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, நான்கு பயிற்சி மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் உள்பட ஆறு பேருக்கு கரோனா பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே, போதிய வசதிகளின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறோம். எங்களுக்கு என்ன பாதுகாப்பிருக்கிறது என கேள்வியெழுப்பிய செவிலியர்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், 150-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், ஊழியர்கள் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.