தைத்திங்கள் மூன்றாவது நாளாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாள்கள் பொங்கல் பண்டிகை முடித்துவிட்டு மூன்றாவது நாளாக சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்தோடு சென்று மகிழ்விப்பது வழக்கம். இந்தநிலையில், கடலூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கக்கூடிய வெள்ளி கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இங்கு கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தோடும் குழந்தைகளோடும் வந்து பண்டிகையைக் கொண்டாடினர். பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் காவல் துறையினர் கடலில் குளிக்க தடை விதித்தனர்.
இதனைத் தொடர்ந்து, குடும்பத்துடன் வந்த உறவினர்கள் கடற்கரையோரம் நீண்ட வரிசையில் நின்று மணல் மேடுகளில் அமர்ந்து இயற்கை காற்றை சுவாசித்து குடும்பத்தோடு கொண்டுவந்த தின்பண்டங்களை அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். பின்னர் சிறுவர்கள் ஒட்டக சவாரி, குதிரை சவாரி, ராட்டினம், சறுக்குமரம் உள்ளிட்டவை விளையாடி மகிழ்ந்தனர்.