தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேர்: அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி - கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்தவர்களின் விவரம்

கடலூர் கெடிலம் ஆறு தடுப்பணை நீரில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி
எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி

By

Published : Jun 5, 2022, 7:06 PM IST

Updated : Jun 5, 2022, 8:27 PM IST

கடலூர்:கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், ஏ.குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆறு பாய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு தடுப்பணை அமைக்கப்பட்டது. இந்த தடுப்பணை தற்போது சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இந்தநிலையில், இன்று (ஜூன் 5) அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகள் நவநீதம் (20), அவரது மருமகளும், குணாளின் மனைவியுமான பிரியா (19) ஆகியோர் தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளனர்.

உடன் அவர்களது வீட்டிற்கு வந்திருந்த குறிஞ்சிபாபாடியைச் சேர்ந்த உறவினரான ராஜகுரு என்பவரின் மகள்கள் பிரியதர்ஷினி (13), காவியா (11) ஆகியோரும் குளிக்க சென்றுள்ளனர். இதில் தடுப்பணை சேற்றில் சிக்கிய ஒருவரை, ஒருவர் மாற்றி காப்பாற்ற முயன்று அனைவரும் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த முத்துராமன் மகள் சுமுதா (16), அமர்நாத் மகள் மோனிகா (16), சங்கர் மகள் சங்கவி (15) ஆகியோர் காப்பாற்ற சென்று அவர்களும் சேற்றில் சிக்கிக் கொண்டனர்.

எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி

திருமணமாகி ஒரே மாதமே ஆன பெண் உயிரிழப்பு:தகவலறிந்த அப்பகுதியினர் ஆற்றுக்குள் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஒருவர் பின் ஒருவராக 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சைப் பலனின்றி அனைவரும் உயிரிழந்தனர். கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு கதறி அழுதனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், உயிரிழந்த பிரியா ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டது குறிப்பிட்டத்தக்கது.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 7 பேரின் உடலுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உயிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "இதுபோன்று ஆற்றுப்பகுதிகளில் தேங்கியுள்ள நீரில் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு முறை எச்சரித்தும் மீறி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருத்தத்திற்குரியது. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் உயிரிழந்த உறவினர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: கடலூர் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு

Last Updated : Jun 5, 2022, 8:27 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details