கடலூர்: சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சியின் எங்கள் மண், எங்கள் உரிமை என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சியில் பேசியபோது, "அண்ணாமலை நடைபயணம் வரும்போது என் மண் என் உரிமை என்று சொன்னார். அதைச் சொல்வதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? என் மண் என் உரிமை என்றால், காவிரியில் இந்நேரம் தண்ணீர் வந்திருக்க வேண்டும். அதனை அவர் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.
இது நாடா? அல்லது கருணாநிதியின் வீடா? தமிழ்நாடு என்ற பெயரை எடுத்துவிட்டு கருணாநிதி நாடு என்று பெயர் வைத்து விடுங்கள். எல்லாவற்றிலும் அவருடைய பெயரை வைத்த பிறகு, நாட்டிற்கு வைப்பதில் என்ன இருக்கிறது? ஆயிரம் ரூபாய் பணம் வழங்குவதில் கூட அண்ணாவின் ஊக்கத்தொகை என்றோ, மக்கள் ஊக்கத்தொகை என்றோ இல்லாமல் கலைஞர் உரிமைத்தொகை என உள்ளது.
அதில் என்ன உரிமை இருக்கிறது? அது என்ன கலைஞர்? அவருக்கும் அந்த காசுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எல்லாவற்றிலும் கலைஞர் என பெயர் வைத்து விட்டீர்கள். அதேபோல் மதுபானங்களிலும் கலைஞரின் பெயரை வைத்து விடுங்கள்" என விமர்சனம் செய்தார்.
மேலும், "படிப்பகத்திற்கு கலைஞரின் பெயரை வைக்கிறீர்கள், குடிப்பகத்திற்கும் அதே பெயரை வையுங்கள். கலைஞரின் டாஸ்மாக் அதில்தான் இந்த அரசு வாங்கும் பாஸ் மார்க்" என கேலி செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்று காவிரியில் தண்ணீர் வரவில்லை. மத்திய பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தால், 5 லட்சம் மக்களைத் திரட்டிக் கொண்டு என்எல்சி-யை முற்றுகையிட்டு, அனைவரையும் கைது செய்து பூட்டை போட்டுப் பூட்டி விடுவேன். அதன் பின்னர் அவர்கள் வருவார்கள் பேசி தீர்க்கலாம் என்று.
ஒரே நாடு, ஒரே ரேஷன், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே சாலை என்கிறார்கள். ஏன் ஒரே தண்ணீர் மட்டும் இல்லை. 400 ஆண்டுகளைக் கடக்காத இந்தியை வைத்துக் கொண்டு படி என்கிறார்கள். 50,000 ஆண்டுகளுக்கு மூத்தது, எங்கள் தாய்மொழி தமிழ்.
39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்ற தமிழ்நாடு முதலமைச்சரும், அங்கே பிரதமர் மோடி உலக மொழிகளில் மூத்த மொழி தமிழ் என்றும் பேசி வருகிறார். ஆனால், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழில் எழுதப்படவில்லை. இது குறித்து இந்த 39 உறுப்பினர்கள் ஒருவர் கூட கேட்கவில்லை. நான் மட்டும்தான் கேட்கிறேன். ஏன் என்றால், மரபணு மாறவில்லை.
ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று சொல்லும் கர்நாடகத்திற்கு, ஒரு யூனிட் மின்சாரம் கூட வழங்க முடியாது என தமிழக அரசு ஏன் சொல்லவில்லை? அது இந்திய அரசு கையில் உள்ளது. எனவே இந்திய அரசு தலையிட்டு காவிரியில் தண்ணீர் வழங்க வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் செவிலியர்கள் விடிய விடிய போராட்டம் - இருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!