கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் கோழிபாண்டியன்(வயது 35). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற 8 வழக்குகள் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் உள்ளது. இவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கோழிபாண்டியனும், மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டனும் சாப்பிடுவதற்காக அண்ணாமலை நகரில் இருந்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். திடீரென, இருவரும் தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கோழிபாண்டியன் மீது வீசினர். அவர் மீது நாட்டு வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தலை மற்றும் உடல் சிதறி கோழிபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.