கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் வசிக்கும் தாமஸ்(40), இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் ஜன்னல் கதவை திறந்து செல்ஃபோனை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்துள்ளது.
அப்போது குழந்தை அழுத சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் எழுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்விளக்கு வெளிச்சத்தில் ஜன்னல் வழியாக மர்ம நபர் செல்ஃபோனை திருட முயற்சித்ததை அறிந்து சத்தம் போட்டுள்ளனர். அப்போது அந்த இளைஞர் அங்கிருந்து சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றார். அப்பகுதி மக்கள் துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் திருட முயற்சித்த வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளைக் கொண்டு பார்த்த போது, அந்த இளைஞர் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் நிர்வாணமாக கையில் கம்பை எடுத்துக்கொண்டு சுவர் ஏறி குதித்து, ஜன்னல் மீது ஏறி திருட முயற்சித்தது தெரிய வந்தது.