கடலூர் நகராட்சிக்குள்பட்ட திருப்பாதிரிப்புலியூரின் குமரன் நகர், சரவணா நகர் பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மேலும் சமீபத்தில் அப்பகுதியில் இணைப்புச் சாலை போடப்பட்டதால் அப்பகுதி உயரமாகவும் குடியிருப்புப் பகுதி பள்ளமாகவும் மாறிவிட்டது. இதனால் அங்கு மழைநீர் வடிவதற்கும் வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வழிந்தோடும் சாக்கடை நீர் தேங்கி நிற்கும் மழைநீரில் கலப்பதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகமாக துர்நாற்றம் வீசுவதால் அங்கு தங்கியிருக்கும் பள்ளிக் குழந்தைகள், முதியவர்களுக்கு எளிதில் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வீட்டைவிட்டு வெளியேற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
தேங்கிய மழைநீரால் அவதியுறும் கடலூர் குடியிருப்புவாசிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறியபோது, குடியிருப்புப் பகுதிகளில் ஓடிய கழிவுநீரை மட்டும் தற்காலிகமாகச் சரி செய்துவிட்டு சென்றுவிட்டனர் என்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கும் மழைநீரை சரிசெய்யவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர். நகராட்சி ஆணையர் நேரடியாக பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடலூரில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!