கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்திலிருந்து நிலக்கரி சாம்பல் பல்வேறு பணிகளுக்காக வெளியே எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இந்தச் சாம்பலை, மேலகுப்பம் கிராமத்தின் வழியாக லாரிகள் எடுத்துச் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து பல முறை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட்.11), மேலகுப்பம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, அவர்கள் மீது மோதியது. இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிர் பிழைத்த அவர் மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.