மத்திய அரசு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விதமாக பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்தத் திட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாகவுள்ள விவசாயிகள் 1.79 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த நிதிநிலை அறிக்கையில் 5 ஏக்கருக்கு மேல் இருக்கும் விவசாயிகள், அரசு ஊதியம் பெறாதவர்கள், வருமான வரி செலுத்தாதவர்கள் என பிரிக்கப்பட்டு புதிதாக விவசாயிகளை இணைப்பதற்கான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் பிள்ளையார் மேடு கிராமத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வங்கிக்கணக்கில் பணம் வந்ததாக குறுந்தகவல் வந்தது. இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விவசாயிகளுக்கு உரிய முறையில் பணம் பெற்றுத் தருவதாகக் கூறி, ஆயிரம் ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதனோடு, அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் எழுந்தது. அந்த நபர் திருவள்ளுவர் மாவட்டத்திற்கான வேளாண் துறை அலுவலகம் கடவுச்சொல்லை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, கடலூர் ஆட்சியர் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' - ஸ்டாலின்