கடலூர் மாவட்டம் ஆலடி அருகே உள்ள கலர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவரும் குருவன் குப்பத்தைச் சேர்ந்த பிரியா (24) என்பவரும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்துவந்த நிலையில், 2018ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரியா, கடந்த டிசம்பர் 27ஆம் தேதி இரவு பிரசவ வலியால் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து நான்கு நாள்களாக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பிரியாவின் வயிறு வீக்கமாக இருந்ததால் அவரது உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைபெற்ற பிரியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த பிரியாவின் வயிற்றில் சிசேரியன் செய்த பழைய துணி, பஞ்சுகள் ஆகியவை இருந்ததனால், அவரது வயிறு வீங்கி உடல் நிலை மோசமடைந்து இறந்துவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கவனக்குறைவால் ஒரு உயிரை கொன்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரியாவின் குடும்பத்தினரும் அவரது உறவினர்களும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.