கடலூர்:காவிரி நீர் பிடிப்புப்பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆர்ப்பரித்து வருவதால், மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. மேலும் அதிக அளவு நீர்வரத்து தொடர்ந்து வருவதால் மேட்டூரில் இருந்து உபரி நீர் அப்படியே திருச்சி கல்லணைக்கு அனுப்பப்படுகிறது.
அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கீழணைக்கு அனுப்பப்படுகிறது; கீழணை அதன் முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வரும் உபரிநீர் விநாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுவதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூர், வையூர், கண்டியமேடு, வேலக்குடி, பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டணம், கீழகுண்டலப்பாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் திட்டு கிராமங்களான கீழ கொண்டலப்பாடி, அக்கரை ஜெயங்கொண்ட பட்டணம், திட்டுக்காட்டூர் கிராமங்களில் உள்ள சுமார் 3000க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி படகுமூலம் பொதுமக்களை புயல் வெள்ளபாதுகாப்பு மையத்திற்கு அழைத்து வரும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.