கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் காவல் நிலைய காவல் அதிகாரிகள் விருத்தாசலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது காவல்துறையினர் இருசக்கரவாகனத்தை நிறுத்த முயன்ற போது, அவர் நிற்காமல் சென்றதால் ஆத்திரத்தில் லத்தியை வீசியுள்ளனர்.
இதில் இருசக்கரவாகனத்தில் சென்றவர் தலையில் லத்திபட்டு கீழே விழுந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை நெருங்கிப் பிடித்தபோது, தலையில் ரத்தம் கசிவதைக் கண்டு, உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் அவருக்கு தலையில் 8 தையல் போட்டுள்ளனர்.
பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் காயம்பட்டவர் வேலூர் மாவட்டம் என்.நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சங்கர்(47) என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து லத்தி வீசிய காவலர் ஜெயபாலிடம் வேப்பூர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி விசாரணை நடத்தினார். இந்நிலையில் காவலர் ஜெயபாலை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டிருக்கிறார்.