கடலூர் விருதாச்சலம் அருகே தே.கோபுராபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்தக் கடையில் விற்பனையாளர்களாக பழனிவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், மேற்பார்வையாளராக ராமகிருஷ்ணனும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள், கடந்த 22ஆம் தேதி விற்பனையை முடித்துவிட்டு கடையை அடைத்துச்சென்றனர். மேலும் மறுநாள் முழு ஊரடங்கு என்பதால் கடை திறக்கப்படவில்லை.
இதை நோட்டமிட்ட சிலர் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கடையிலிருந்த 22 பெட்டிகள் மதுபானங்களை திருடிச் சென்றனர்.
இவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயாகும். இந்நிலையில் சம்பவத்தன்று மறுநாள் காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் விருதாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் ஆய்வாளர் ராஜதாமரைபாண்டியன் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும் 200 மீட்டர் தூரத்துக்கு ஆங்காங்கே ஒரு சில மதுபாட்டில்களும் கிடந்தன. இதன் மூலம் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச்சென்றபோது சில மதுபாட்டில்கள் கீழே விழுந்திருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மதுபானங்களை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.