"சமூக நீதியை நிலைநாட்டச் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - அன்புமணி ராம்தாஸ் கோரிக்கை! கடலூர்: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமூக நீதி காக்கச் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் சிதம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று(ஜன.2) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமூக நீதிப்பேரவை தலைவரும் வழக்கறிஞருமான பாலு வரவேற்புரை வழங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து அனைவரும் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, "சமூக நீதியை நிலைநாட்டத் தமிழ்நாடு அரசு உடனடியாக சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் மூத்த அரசியல் தலைவர்கள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதலமைச்சரை வலியுறுத்தினர்.
1931 ஆம் ஆண்டு வெள்ளையர்கள் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் எத்தனை சமுதாயங்கள் பயன்பட்டது என்பது தெரியவில்லை. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து இட ஒதுக்கீடு அமல்படுத்துகிறார்கள். ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா இதைச் செய்து விட்டார்கள். தெலுங்கானா, மகாராஷ்டிரா அறிவிக்கப் போகிறார்கள். ஆனால் சமூக நீதியின் கோட்டை, தொட்டில் என்றெல்லாம் கூறிக் கொள்ளும் திமுக இன்னும் இதை அறிவிக்கவில்லை. அதற்கு என்ன தயக்கம்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதை நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் சொல்லுகிறார். மத்திய அரசு எடுப்பது சென்சஸ். நாங்கள் கேட்பது காஸ்ட் சர்வே. பீகாரில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. தைரியமாக ஒரு முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை 90 விழுக்காடாக உயர்த்தலாம். இது மிகவும் அவசியமானது. இதை நடத்தினால் சாதிக் கலவரம் எல்லாம் வராது.
சென்னை, மதுரை கோவையைத் தொடர்ந்து தற்போது சிதம்பரத்தில் இந்த கருத்தரங்கம் நடந்திருக்கிறது. இதையடுத்து வேலூர், திருச்சியிலும் ஆகிய மாவட்டங்களிலும் நடைபெற இருக்கிறது. அதன் பிறகும் இந்த கருத்தரங்கம் தொடராவிட்டால் சமூக நீதி மீது அக்கறை கொண்ட அனைவரும் போராட்டங்களை முன்னெடுப்பார்கள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களில் இதுவும் ஒன்று. அடித்தட்டு மக்கள் முன்னேறும்போதுதான் தமிழ்நாடு முன்னேறும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பீகாரில் கலவரம் வரும் என்று சொன்னார்கள். ஆனால் அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஆர்வம் இல்லை என்றால் சமூக நீதி மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்றுதான் அர்த்தம்.
இந்த கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் பல்வேறு திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை வழங்கலாம். இதற்காகத் தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அறவழி போராட்டம் நடத்தப்படும். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு 18 விழுக்காடு இட ஒதுக்கீடு இருக்கிறது. உண்மையிலேயே 22 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இருக்கிறது. அது 24 சதவீதமாக உயரும். கணக்கெடுப்பு நடத்த மனசு இருக்கிறது, அதிகாரம் இல்லை என முதலமைச்சர் கூறுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்ற மாநில முதலமைச்சர்கள் செய்கிறார்கள். அதை ஸ்டாலினும் செய்ய வேண்டும்.
பருவநிலை மாற்றம் காரணமாக மோசமான வறட்சி ஏற்படும். தற்போது கூட சில மாவட்டங்களில் மட்டுமே அதிக மழை பெய்திருக்கிறது. மேட்டூரில் தண்ணீர் இல்லாததால் பல லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் கருகி வருகிறது. அதனால் புதிய நீர்ப்பாசன திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். கொள்ளிடத்தில் இதற்காகத் தடுப்பணை கட்ட வேண்டும். 3 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் போடும் தமிழ்நாடு அரசு பேரிடர் நிதியாக ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும். பேரிடரை வைத்து அரசியல் செய்யக்கூடாது. மத்திய அரசு கொடுக்கவில்லை என காரணம் கூறக்கூடாது. அதே போன்று மத்திய அரசும் பேரிடர்க்கான நிதியை வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகளவில் நிவாரணங்களை வழங்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:தமிழக வெள்ள பாதிப்புகளை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்